நேருவின் 137-வது பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் மரியாதை!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

நேருவுக்கு பிரதமர் மோடி மரியாதை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் பங்களிப்பு: ராஜ்நாத் சிங் புகழாரம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக அவர் வழங்கிய தலைமையும் நமது நாட்டின் தொடக்க கால வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 14 – குழந்தைகள் தினம் உருவான வரலாறு!

குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு, ‘சாச்சா நேரு’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை ‘பால் திவாஸ்’ எனப்படும் குழந்தைகள் தினமாகக் கொண்டாட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிறந்த நேரு, 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி காலமானார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற அவர், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக விளையாட்டுகள், போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், அரசு அமைப்புகள் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவுக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன.

குழந்தைகள் தினம் உருவான பின்னணி!

1954-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20-ம் தேதியை உலக குழந்தைகள் தினமாக அறிவித்தது. இதையடுத்து, 1956-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவிலும் நவம்பர் 20-ம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1964-ம் ஆண்டு பிரதமர் நேரு மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதியை தேசிய குழந்தைகள் தினமாக அறிவித்து கொண்டாட நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.