திருடிய சைக்கிளை விற்பனை செய்த போது கிடைத்த பணத்தை சரிசமமாக பங்கு பிரிக்காததால் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகில் கணேசன் (வயது 45) என்பவர் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலை மீட்டு செம்மஞ்சேரி போலீசார் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ராயபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் கொலையான கணேசன் குறித்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், தங்குவதற்கு வீடு இல்லாததால், மதுவுக்கு அடிமையான அவர் அங்குள்ள பழைய பொன்னியம்மன் கோயிலும், அம்மா உணவகத்தின் பின்புறமும் உறங்கி வந்தது தெரியவந்தது.
கணேஷனுடன் ஆட்டோ ஓட்டுநர் ராஜா (எ) ராஜுவும் (38) நண்பர்களாக பழகிவந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கொலை நடந்த 24.06.2021 அன்று அம்மா உணவகத்தின் பின்புறம், இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்பட்ட நிலையில் கணேஷன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து ராஜா அங்கு இல்லாததால் போலீசாரின் விசாரணை ராஜா மீது திரும்பியது.
பின்னர் தலைமறைவாக இருக்கும் ராஜா ஓட்டி வந்த ஆட்டோ, அங்கிருந்த இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றிய தனிப்படையினர் ஆட்டோ சென்ற பகுதியை நோக்கி தங்களது தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
ஓஎம்ஆர் சாலையில் கொலை செய்துவிட்டு இசிஆர் சாலைக்கு தப்பி சென்று கொலை செய்ததுகூட தெரியாமல் ஈஞ்சம்பாக்கத்தில் மதுபான கடையின் வெளியே இசிஆர் பிரதான சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மது அருந்திக்கொண்டிருந்துள்ளார் ராஜா. சாலையில் தேடி வந்த ஆட்டோ நிற்பதை பார்த்த போலீசார் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்த ராஜாவை கையும் கவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் கொலையானது தனக்கு தெரியாது எனவும், கணேஷன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியதாகவும் என்று கூறியுள்ளார்.
எதற்காக கத்தியால் குத்தினார் என்று தனிப்படையினர் கேட்க போலீசாரே தங்களது தலையில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருந்தது அவரது பதில். மதுவுக்கு அடிமையான இருவரும் நண்பர்களாக ஒன்றாக மது அருந்தி வந்ததுள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவம் நடைபெற்ற அன்று கணேஷன் ஒரு சைக்கிளை திருடியுள்ளார். அதை ராஜா ஆட்டோவில் எடுத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். திருடிய சைக்கிளை விற்பனை செய்த பணத்தில் ராஜாவுக்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டு மீதமுள்ள 200 ரூபாய்யை இறந்த கணேஷன் எடுத்துக்கொண்டுள்ளார்.
பங்கு சரிபாதியாக பிரிக்காமல் அதிகமாக 100 ரூபாய் கணேஷன் எடுத்துக்கொண்டதால் திருடிய சைக்கிளை எடுத்துவர உதவிய எனது ஆட்டோவிற்கு வாடகையாக 100 ரூபாய்யை ராஜா கேட்டுள்ளார். ராஜாவுக்கு 100 ரூபாயில் பங்கு தர மறுத்ததால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆத்திரமடைந்த ராஜா, கணேஷன் வைத்திருந்த கத்தியை பிடிங்கி கணேஷனை குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக போலீசார் விசாரணையில் கைதான ராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை நடந்த அடுத்த சில மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை அடையார் துணை ஆணயர் பாராட்டினார். 100 ரூபாய்க்காக உடன் பழகினவரையே கொலை செய்த சம்பவம் சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







