சிவகளையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில், 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த பிப்ரவரி முதல் ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் தொடங்கியது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழிகளில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளன. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் பிரமாண்டமாக உள்ளன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் 2 அடி முதல் 4 அடி வரை உயரமாக காணப்படுகிறது. இதனால் வரலாற்று ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.







