நம்ம சென்னை, நம்ம பெருமை என்ற உணர்வுடன் சென்னை தினத்தைக் கொண்டாடி வருவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரும்பாக்கதில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2020, 2021, 2022-ஆம் ஆண்டுக்கான தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அப்போது, 2020-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் ராசேந்திரன் பெற்றுக் கொண்டார். 2021-ஆம் ஆண்டுக்கான விருதை முனைவர் நெடுஞ்செழியனும், 2022-ஆம் ஆண்டுக்கான விருதை ழான் லூய்க் செவ்வியாரும் பெற்றுக்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தமிழறிஞர்கள் எழுதிய 16 புத்தகங்களை அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தாம் மேயராக இருந்தபோது மெட்ராஸ் என்ற பெயரைச் சென்னை என அப்போதை முதலமைச்சர் கருணாநிதி மாற்றியதைச் சுட்டிக்காட்டினார்.
சிங்கார சென்னையின் 383வது பிறந்த நாளை இன்று “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்று உணர்வுப்பூர்வமாக மக்கள் கொண்டாடி வருவதாகக் கூறிய அவர், தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அரசு திமுகதான் எனப் பெருமையுடன் தெரிவித்தார். இதேபோல், 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழுக்குச் செம்மொழி என்று தகுதி பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்றைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்குச் சென்னை ஒரு ரோல் மாடல். இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறையச் சம்பவங்களைச் செய்யப் போறோம். காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். (1/2) pic.twitter.com/KUBvODJVve
— M.K.Stalin (@mkstalin) August 22, 2022