ஆன்லைனில் பரிசு கூப்பன் போன்ற போலியான குறுஞ்செய்திகள் வருவதால், அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அண்மை காலமாக காவல்துறை அதிகாரிகளின் செல்பேன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட அந்த கும்பல் தான் டிஜிபி பேசுவதாகவும், தங்களுக்கு பரிசு கூப்பன் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, பணம் கொடுத்து பரிசு கூப்பனை பெற்றுகொள்ளுமாறு நம்ப வைத்துள்ளது. இதனை உண்மை என நம்பிய சில காவல்துறை அதிகாரிகள் அந்த முகம் தெரியாத போலி டிஜிபியிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு 12-வது சிறப்பு பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரிடம் அந்த கும்பல் தனது மோசடி விளையாட்டை விளையாடியுள்ளது.
கார்த்திகேயனும் உண்மை என நம்பி 7.5 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இந்நிலையில், மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதில், சைபர் மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க ஆன்லைன் மோசடி செய்திகளை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
டி.ஜி.பி. அனுப்புவதாக அமேசான் பரிசு கூப்பன் என்ற போலி குறுஞ்செய்தி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது என தெரிவித்துள்ள அவர், காவல்துறை சார்பில் அதுபோன்று எந்த தகவலும் அனுப்பபடவில்லை என விளக்கமளித்துள்ளார். எனவே, பொதுமக்கள் யாருக்கேனும் இதுபோன்று போலியான செய்தி வந்தால் தமிழ்நாடு சைபர்கிரைம் இணையதளத்திலும், 1930 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








