QR கோடு ஸ்டிக்கர் மூலம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பணம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த ஓக்கியம் பேட்டை பிள்ளையார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த் (வயது 32) தனது வீட்டின் முன்பு டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்த பேடிஎம் QR கோடு பயன்படுத்தி பணம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஆன்லைனில் செலுத்தும் பணம் கடந்த சில தினங்களாகத் தனது வங்கிக்கு வரவில்லை என்பதை உணர்ந்த அவர், தன் கடையில் ஒட்டப்பட்டுள்ள QR கோடு ஸ்டிக்கருக்கு பதிலாக வேறொரு QR கோடு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதாகவும், அதனால் தனக்கு ரூபாய் 3 ஆயிரம் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘அமமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம்’
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது கண்ணகி நகரைச் சேர்ந்த 21 வயதான வெங்கடேஷ் என்பதும் அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்காவல் படையில் பணியாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், சென்னை மாநகர காவல் துறையில் காவலராகத் தான் பணியாற்றுவதாகப் போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல், அடையாறு காவல் நிலைய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் QR கோடு ஸ்டிக்கர் ஒட்டி அவர் பணமோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் வெங்கடேஷை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 5க்கும் அதிகமான QR கோடு ஸ்டிக்கர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.








