மாநிலக் கட்சிகளைத் தாண்டி தேசிய கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாநிலக் கட்சிகளைத் தாண்டி தேசிய கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. கட்சி தொடங்கி 5 ஆண்டுகளைக் கடந்திருக்கும் சூழலில் அமமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த செயற்குழு -பொதுக்குழு பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
அமமுகவின் எதிர்காலம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற உள்ள இந்த செயற்குழு பொதுக்குழுவில் சுமார் 3,000 அதிகமான செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடத்தக்கூடிய கூட்டம் என்றாலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய கூட்டமாக அமையப் போகிறது. 
உட்கட்சி பூசல், ஒற்றைத் தலைமை விவகாரம், தேர்தல் ஆணையத்தில் புகார், நீதிமன்ற வழக்கு, என அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து பிரிந்து இயங்கி வரக்கூடிய சூழலில் தற்போது எழுந்திருக்கும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மோதல் அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்திருக்கிறது. இந்த சூழலில் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15ல் முக்கிய முடிவு?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில் செயற்குழு பொதுக்குழு கூடும் அதே ஸ்ரீவாரு மண்டபத்தையே இந்தமுறை தேர்ந்தெடுத்திருக்கிறார் டிடிவிதினகரன். திருச்சியில் பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்ட டிடிவி தினகரன், தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்த முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் போது எப்படி அமைதியான முறையிலும் கட்டுக்கோப்பாகவும் பொதுக்குழு நடைபெறுமோ அதில் சிறு அளவும் மாற்றமில்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பது தான் இந்த பொதுக்குழுவின் முக்கிய நோக்கம் எனச் சொல்லப்படுகிறது. அதிலும், பொதுக்குழுவால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலே அரசு விடுமுறை நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி கூட்ட முடிவு
செய்யப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘மதுரையில் கள்ள நோட்டுகளை மாற்றும் பெண்கள்; கண்காணிப்பு தீவிரம்!’
அமமுக தீர்மானங்கள் என்ன?
சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக வரவேற்பு எனப் பிரம்மாண்டமான முறையில் பொதுக்குழுவை நடத்தி முடிக்க அமமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இல்லத்திலிருந்து ஸ்ரீவாரு மண்டபம் வரை டிடிவி தினகரனுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருட்கள் விற்பனை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை உள்ளிட்ட தீர்மானங்கள் திமுக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட உள்ளன. அதே நேரத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் சில தீர்மானங்களும், அதிமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கும் வகையில் சில தீர்மானங்களும் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த இலக்கை நோக்கி அமமுக
தேர்தலில் அடுத்தடுத்து தோல்வி முக்கிய நிர்வாகிகள் விலகல் என பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து எந்தவித சோர்வுமின்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ அதை நோக்கத்தோடு இன்றளவும் பயணித்துக் கொண்டிருக்கிறது அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் இந்த பொதுக்குழு. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், உரிய மரியாதை அளிக்கும் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எனவே, மாநிலக் கட்சிகளைத் தாண்டி தேசிய கட்சிகளின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
– விக்னேஷ்









