ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை வெளி நாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் வெளி நாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக புகார் தெரிவித்ததோடு,அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த அரசாங்கம் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை என்பதாலும், இதற்கு தனியார் வங்கிகளும் உடந்தையாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்களது கருப்பு பணத்தை முதலீடு செய்கின்றனர் . ஒருசில மாதங்களுக்கு மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வட்டி பணத்தை கொடுக்கும் நிறுவனங்கள், பின்னர் நஷ்ட கணக்கை காண்பித்து, நிறுவனங்களை மூடிவிட்டு வெளி
நாட்டிற்கு தப்பித்துவிடுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் இதுமாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்த நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு, தங்களது பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், முதலீட்டாளர்களிடம் தங்களது பணத்தை இழந்தது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வழக்குகள் விசாரிக்கபட வேண்டுமென கோரிக்கையை வைத்துள்ளார். இதுமட்டுமின்றி மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய, தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும் உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









