சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தை dp photo ஆக வைத்து நூதன முறையில் மர்ம
நபர்கள் மோசடி செய்ய முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் டிஜிட்டல் பேங்கிங் வசதியாலும் நாளுக்கு நாள் முறைகேடுகளும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. எவ்வளவோ பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தினாலும், விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டாலும் ஏமாறுபவர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டே தான் இருக்கின்றனர். சிலர் மட்டுமே உஷாராகி தங்களது பணத்தை பாதுகாத்துக் கொள்கின்றனர்.
நண்பர்கள்-உறவினர் புகைப்படங்கள், பிரபலங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மர்ம கும்பல் பணம் பறித்து வருவதையும் செய்திகளாக நாம் அவ்வப்போது படித்து வருகிறோம்.
இந்நிலையில், சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சென்னை மண்டல அதிகாரிகளிடம் அமேசான் கிஃப்ட் கார்டை மர்ம நபர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. மேயர் பிரியா அனுப்பியது போன்று வாட்ஸ் அப் செய்தி அனுப்பி மூன்று பேரிடம் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக மேயர் பிரியாவின் தரப்பில் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.








