பொது இடத்துக்கு வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார்.
சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “முதல்வர் அறிவுறுத்தல்படி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 99 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி போட்டுவிட்டனர். 86 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுள்ளனர். இரண்டாவது தடுப்பூசிக்கு தகுதியான மக்கள் உடனடியாக, அதை செலுத்திக் கொண்டால் உடலுக்கு நல்லது. பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களும், உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பொது இடத்துக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.
மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும், நோய் தொற்று வேகமாக பரவகிறது. அதைத் தவிர்க்க வேண்டியது கட்டாயம். அவரவர் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், பிறர்களது பாதுகாப்புக்காக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தற்போதுவரை சென்னை மாநகராட்சியில் 1,030 கி.மீ தொலைவுக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. மொத்தமாக தற்போதுவரை 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. செப்டம்பர் மாதத்துக்குள் 100 சதவீத பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளோம். பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பணிகள் சரியாக செய்யாவிடின், அதை மீண்டும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
-ம.பவித்ரா








