”அதிமுகவினர் உயிரை காத்தார்”- முதலமைச்சருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் பாராட்டு

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி அதிமுகவினரின் உயிரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.   அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்த 11ந்தேதி…

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி அதிமுகவினரின் உயிரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.  

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்த 11ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாகவும் ஓபிஎஸ்ஆதரவாளர்கள் தொடர்ந்து போட்டி அளித்து வருகின்றனர். இதற்கு இபிஎஸ் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதாக வெளியான ஆடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த ஆடியோவில் பேசியிருப்பது தான் அல்ல என்றும், தம்மைப்போல் வேறு ஒருவரை பேச வைத்து மிமிக்ரி செய்யப்பட்டிருப்பதாகவும் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி,  அதிமுகவில் மிக மூத்தவரான பொன்னையன் பல உண்மைகளை அந்த ஆடியோவில் பேசியிருப்பதாக தெரிவித்தார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என பொன்னையன் மாற்றிப்பேசுவதாகவும் புகழேந்தி கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்னையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கூறிய புகழேந்தி,   பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.  கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து அதிமுகவினரின் உயிர்பலி நிகழாமல்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்துள்ளதாக புகழேந்தி பாராட்டு தெரிவித்தார்.

விசுவாசத்தின் பிறப்பிடமாக முன்னாள் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகக் கூறிய புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னொரு முகம் உண்டு என்றும், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்றும், இபிஎஸ் தரப்பினரை எச்சரித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.