கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூட வகுப்பறை கட்டடத்தின் மேல்கூரையில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை விழுந்ததில் ஆறாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் அரசு மேல்நிலைபள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 350 பேர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இரண்டு வகுப்பறைகள் 19 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டப்பட்டன.
தற்போது இந்த வகுப்பறையில் 6-ம் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வகுப்பறை கட்டிடத்தின் மேல்கூரையிலிருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்துதில் 6-ம் வகுப்பு மாணவிகள் தாரண்யா, ராகினி, கிருத்திகா, அஸ்மிதா நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சம்பவ இடத்தை சோழபுரம் போலீசார் பார்வையிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.
அனகா காளமேகன்






