உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்பது மத்திய அரசின் கடமை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலி நாரிமன் தெரிவித்துள்ளார். கொலிஜியம் அமைப்பின் நடைமுறைகளில் வேறுபாடுகள் இருந்தால் கூட அதை ஏற்கவேண்டியது மத்திய அமைச்சர் மற்றும் அரசின் கடமை என பாலி நாரிமன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொலிஜியம் அமைப்பின் நடைமுறை தொடர்பாக மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்சி சக்லா நினைவு சொற்பொழிவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலி நாரிமன் கலந்து கொண்டு பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். நீதித்துறை சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா இருண்ட காலத்துக்கு சென்று விடும். இந்திய நீதித்துறை சுதந்திரமாக செயல்பட கூடிய அமைப்பு. அமெரிக்காவில் கூட நீதித்துறைக்கு இவ்வளவு சுதந்திரம் வழங்கப்படவில்லை.
நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை சட்டத்துறை அமைச்சர் விமர்சித்து வருகிறார். அவருக்கு நமது அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படையான விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். அரசியல் சாசன அமர்வுதான் அரசியலமைப்பு சட்டத்தின் கூறுகளை உறுதி செய்துவருகிறார்கள். அவர்களின் உத்தரவை நீங்கள் ஏற்க வேண்டியது கடமை. நீங்கள் விமர்சிக்கலாம், ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு ஒரு காலக்கெடுவை விதிக்கவேண்டும். இவ்வாறு முன்னாள் நீதிபதி பாலி நாரிமன் தெரிவித்துள்ளார்.