அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சசராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்தபோது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செயய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி நால்வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான இன்றை விசாரணையில், தனக்கு எதிராக புகார் அளித்தவர்கள் மீதும் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக புகார் உள்ளதாகவும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படுவரா என்கிற கேள்வி மேலெழுந்துள்ளது.








