பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் பள்ளியில் 8 மற்றும்…

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களான அன்பழகன் மற்றும் விஸ்வரஞ்சன் இரு மாணவர்கள் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மாணவர்களுக்க திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ் குமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து இரங்கலையும், குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/DrTamilisaiGuv/status/1471730095232536577

இது குறித்து அவர், “திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.