தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என சாடினார். தேர்தல் காலத்தில் தமிழ் ஈழம் மற்றும் சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதியில்லை என தெரிவித்தார். மேலும், சமூக நீதியை அதிமுக பாதுகாத்து வைத்துள்ளதாக கூறிய அவர், இடஒதுக்கீட்டை பெற்றுதந்தவுடன் சமூக நீதியை பாதுகாத்தவர் ஜெயலலிதா எனக்கூறினார்.
திமுக மீதுள்ள அதிருப்தியை திசை திருப்பவே சமூக நீதி கூட்டமைப்பு என்ற உத்தியை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என சாடிய அவர், ஊழல் குற்றச்சாட்டுள்ள பாதி அமைச்சர்கள் விரைவில் கம்பி எண்ணுவார்கள் என குறிப்பிட்டார். வரும் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணித்தான் வெற்றிபெறும் எனக்கூறிய ஜெயக்குமார், தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என ராகுல் காந்தியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.







