கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் உணவு பொருட்கள் ஏதும் வீணாகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் “நாட்டில் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுவது அதிகரித்துள்ளதா?” என மாநிலங்களவையில் ஹரியானாவை சேர்ந்த தரம்பீர் சிங் எம்.பி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோக இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி,
“கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 24.45 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு உணவு பொருட்கள் வீணக்கப்படவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசு கணக்கீடு செய்துள்ளதாகவும் அதன்படி கடந்த ஆண்டு ரூ.2.77 கோடி மதிப்புள்ள 1,850 டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் கடந்த 2016-2021 வரை தமிழ்நாடு, மேற்குவங்கம், நாகாலாந்து, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களில் ரூ.24.45 கோடி மதிப்புள்ள 20,432 டன் உணவு பொருட்கள் வீனடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் 2016-2020 வரை 89 டன் உணவு பொருட்கள் வீணாகியுள்ளது. ஆனால், கடந்த 2021ல் தமிழகத்தில் உணவு பொருட்களை வீணடிக்கப்படவில்லை என அமைச்சர் தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
இது பெரும்பாலும் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.








