முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகரை தாக்கியது மற்றும் நில…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகரை தாக்கியது மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து வாரத்தில் 3 நாட்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், திருச்சியில் இருந்து வந்த பின்பு வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். இதனையடுத்து இன்று காலை புழல் சிறையில் இருந்து வெளிவந்த ஜெயக்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக அரசு தன்மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். திமுக பிரமுகர் கள்ள ஓட்டு செலுத்த முயன்றதாகவும் அதை தட்டிக் கேட்டதால் தன்னை திமுக அரசு கைது செய்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

அண்மைச் செய்தி: கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள்; இனியும் பொறுத்து கொள்ள முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி

மேலும், எத்தனை வழக்கு போட்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனக்கூறிய அவர், சிறையில் வந்து தம்மை சந்தித்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.