கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுவதை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
மதுரை முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில், பள்ளியில் பணியாற்றிய இரண்டு பெண் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
பாலியல் தொந்தரவு அளித்திடுவதாக, பெண் ஆசிரியர்கள் புகார் அளித்ததை ஏற்று, இருவரையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் எந்த அடிப்படையில் இவ்வாறு மனு தாக்கல் செய்தார்? என கேள்வி எழுப்பினார்.
கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுவதைக் கண்டு, நீதிமன்றம் அதிர்ச்சி அடைவதாகவும், இனியும் இதுபோன்ற செயல்பாடுகளை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற நபர்கள் நீதியின் பார்வையிலிருந்து தப்பிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய நீதிபதி, இதுதொடர்பாக 2 பெண் ஆசிரியர்களின் புகார் கடிதத்தை அடிப்படையாக கொண்டு, மதுரை கீரைத்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








