உள்ளாட்சி நிதியை பறிப்பதாக திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

உள்ளாட்சிகளுக்கான நிதியை பறித்துவிட்டு நம்ம ஊரு சூப்பர் என்று திமுக அரசு விளம்பர பலகை மட்டும் வைப்பதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள்…

உள்ளாட்சிகளுக்கான நிதியை பறித்துவிட்டு நம்ம ஊரு சூப்பர் என்று திமுக அரசு விளம்பர பலகை மட்டும் வைப்பதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் , அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தற்போது பொதுமக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பல்வேறு பிரிவுகளாக உயர்த்தி வருகின்றனர். சினிமா தியேட்டர் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு 6.25% உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு, ரயில்வே குடியிருப்பு ஆகியவற்றிற்கு 92 சதவீதமும், பொதுமக்கள் பயன்படுத்தும் வீட்டு மின்சாரத்திற்கு 54 சதவீதமும் மின் கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

சினிமாவிற்கு ஏன் குறைத்து மின் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களுக்கு தெரிந்த ஒன்றாகும் என்ற அவர், உள்ளாட்சி அமைப்புகளில் கணக்குகளில் இருந்து பணத்தை மீண்டும் தமிழக அரசின் உள்ளாட்சித் துறைக்கு திருப்பி அனுப்ப அரசாணை அனுப்பப்பட்டுள்ளது என்றார். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால் உள்ளாட்சிகளுக்கான நிதியை பறித்துவிட்டு நம்ம ஊரு சூப்பர் என்று ஊருக்கு ஊர் விளம்பர பலகை வைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.