தமிழ்நாடு போக்குவரத்து துறையை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் வருகிற 16-ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெற்றும், பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். போக்குவரத்து துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்வு அரசு ஊழியர்கள் ஆக்குவதே என்றும் அதன் மூலம்தான் ஊதியமும், ஓய்வூதியமும் பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் அண்ணா தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழே தங்கள் கோரிக்கைகளை அறிவிப்பதாக இருந்ததாக கூறிய அண்ணா தொழிற்சங்கத்தினர், பின் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதை அறிவிக்க முடியாமல் போய்விட்டது என்றனர். மேலும் கடந்த ஆட்சியில் தற்போதைய ஆளுங்கட்சி சங்கம் 25 சதவீத ஊதிய உயர்வு கோரினர். ஆனால் தற்போது 5 சதவீதத்திற்கு ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே, ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதால் போக்குவரத்து துறையை கண்டித்து வருகிற 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில், நிலைக்குழுவில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை இணைக்கவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்