ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஃபோர்டு, சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை, குஜராத்தில் சனண்ட் (Sanand) பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், ஃபோர்டு இந்தியா நிறுவனம், நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஃபோர்டு நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவினால் இந்நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.
ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கொரானா கால வருவாய் இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன்,
லாபம் வந்தால் எனக்கு நஷ்டம் வந்தால் மூடிவிட்டு ஓடிவிடுவோம் எனும் குறுகிய மனப்போக்கு ஏற்புடையதல்ல. இதுநாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், தளர்வுகள், உதவிகள், மானியங்கள், நீர் உள்ளிட்ட வளங்கள் ஆகியவற்றுக்குப் பொருளே இல்லாமல் ஆகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும் கவனமும் அந்நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்டவேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.
Advertisement: