கேரளா படகு விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி – பொதுமக்கள் அஞ்சலி!

கேரளா படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில்…

கேரளா படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில் உள்ள  கடற்பகுதியில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில், அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2 அடுக்கு கொண்ட படகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்றனர். அப்போது அந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணம் செய்தவர்களில் 30க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகி இருந்தது. அதில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 எனவும், 8 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விபத்தில் பலியானவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு வந்தது. இதில் பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்னும்மாள் சைதலவியின் மனைவி சீனத், மற்றும் குழந்தைகள் ஹஸ்னா (18), ஷா (13), ஷாம்னா (12), ஃபிதா தில்னா (7), சகோதரர் சிராஜின் மனைவி ரசினா (27), குழந்தைகள் சஹாரா (8), நைரா (7), ருஷ்தா மற்றும் உறவினர்கள் இருவர் என 11 பேரும் உயிரிழந்தனர்.

இவர்களின் உடல்கள் உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே இடத்தில் வைக்கப்பட்ட உடல்களுக்கு திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.