காய்கறிகளின் விலை ஏற்றத்தை அடுத்து தற்போது வாழைப்பழத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் வாழைப்பழத்தின் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி விலை இரு மடங்காக அதிகரித்ததை அடுத்து , பலரும் தக்காளி சாப்பிடுவதையும், சிலர் தக்காளி பயன்படுத்துவதையும் நிறுத்தினர். இந்த நிலையில், கிலோ 200 வரை விற்கப்பட்ட தக்காளி சமீபகாலமாக படிப்படியாக குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் சாமானியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் சமீபகாலமாக வாழைப்பழம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த வரிசையில் வாழைப்பழம் 100 கிலோவை தாண்டியுள்ளது. வாழைத்தார் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெங்களூரில் உள்ள பின்னிபேட்டை சந்தைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 1500 குவிண்டால் வந்து கொண்டிருந்த வாழைப்பழ வரத்து, தற்போது 1000 குவிண்டால்களாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு வரும் வாழைப்பழங்கள் அங்கிருந்து தும்கூர், ராமநகரா, சிக்பள்ளாப்பூர், ஆனேக்கல், பெங்களூரு ரூரல் ஆகிய பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து அதிகளவில் வாழைப்பழங்கள் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக சந்தை அதிகாரிகள் கூறுகின்றனர். வரத்து குறைந்ததால், ஏலக்கி ரக வாழைப்பழத்தின் மொத்த விலை ரூ.78-ஐ எட்டியுள்ளது. இதில் ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்து சந்தையில் வியாபாரிகள் ஏலக்கி ரக வாழைப்பழத்தை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்கின்றனர். அதேபோல் பச்பேல் ரகம் ரூ.18ல் இருந்து ரூ. 20 வரை விற்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக பச்பேல் ரக வாழைப்பழங்கள் கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் இன்னும் சில தினங்களில் ஓணம், விநாயக சதுர்த்தி மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் வாழைப்பழங்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா