நடைபாதை கடை போடுவதில் தகராறு… சக வியாபாரியை கத்தியால் குத்தியதாக அஸ்வினி கைது…!

மாமல்லபுரம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண், நதியா என்ற பெண்ணை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர்…

மாமல்லபுரம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண், நதியா என்ற பெண்ணை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர் இனப்பெண். இவர் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தங்களை அன்னதானத்தில் அமர வைக்கவில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உடனடியாக அவரது வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி சமபந்தியில் அமர வைத்து அவர்களை கௌரப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அஸ்வினி முதலமைச்சரின் பெயரை வைத்து மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தனக்கு முதலமைச்சரை தெரியும் என்று மிரட்டுவதாக புகார் எழுந்தது. மேலும், வங்கிகளில் கடன் கேட்டு மிரட்டுவதாகவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் இவர் மீது பல்வேறு வழக்குகள் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று மாமல்லபுரம் கடற்கரை செல்லும் வழியில் நடைபாதை கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் திருக்கழுக்குன்றம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த நதியா என்ற நரிக்குறவர் இனப்பெண்ணிற்கும் அஸ்வினிக்கும் ஏற்பட்ட தகராறில் அஸ்வினி நதியாவை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நதியா வயிறு கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அஸ்வினியை கைது செய்த மாமல்லபுரம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.