நீலகிரியில் காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள சிவப்பு ரோஜாக்கள் மற்றும் கொய்மலர்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் என ஏராளமானோர் வருகை புரிவது வழக்கம்.
அவ்வாறு காதலர் தினத்தன்று சுற்றுலா தளங்களுக்கு வருகை புரியும் காதலர்கள்
ரோஜா மற்றும் கொய்மலர்களை வாங்கி தங்கள் காதலர்களுக்கு கொடுத்து காதலை வெளிப்படுத்தி மகிழ்வது வழக்கம்.
இதனை முன்னிட்டு ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் என பல்வேறு வண்ணங்களில் உள்ள ரோஜா மலர்களும், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியிலிருந்து கொய்மலர்களும் சுற்றுலா தளங்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா மலர்கள் இந்த ஆண்டு வரத்து குறைவு காரணமாக 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 20 மலர்கள் கொண்ட பூங்கொத்து 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ள சிவப்பு ரோஜா மலர்கள் காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியினரை கவர்ந்து வருகிறது. இதனை காதலர்கள்
ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அதேப்போல் கொய்மலர் விற்பனை அதிகரித்து பூ ஒன்று 15 முதல் 20 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.









