முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

தாயிடம் இருந்து பிரிக்கும் நிகழ்ச்சி: குட்டி யானைக்கு புனித் ராஜ்குமார் பெயர்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர், குட்டி யானை ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46), கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. அவர் உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டூடியோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைவு, கன்னட ரசிகர்கள் மத்தியிலும் இந்திய திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமுக்கு (Sakrebailu Elephant Training Camp) சென்றிருந்தார். அங்கு யானைகள் பயிற்சிப் பெறுவதைக் கண்டு ரசித்தார். இதனால், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ள குட்டி யானை ஒன்றுக்கு அவர் பெயரை சூட்டியுள்ளனர். இதைத் துணை வன பாதுகாவலர் நாகராஜ் தெரிவித்தார்.

நேத்ரா என்ற யானைக்குப் பிறந்த அந்தக் குட்டி யானையை தாயிடம் இருந்து பிரிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. நாகராஜ், கால்நடை மருத்துவர் வினய் மற்றும் வன அதிகாரிகள் முன்னிலையில், தாயிடம் இருந்து பிரித்தனர். அதாவது தாய் யானையை கட்டிப்போட்டு விட்டு, குட்டி யானையை வேறு முகாமுக்குப் பிரித்து சென்றனர்.

இதுபற்றி துணை வன பாதுகாவலர் நாகராஜ் கூறும்போது, ’குட்டி யானைக்கு 2 வயது ஆனதும் தாய் யானையிடம் இருந்து அதைப் பிரிப்பது வழக்கம். மழைக்காலம் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டதால் மூன்று மாதங்கள் தாமதமானது. முன்பு, குட்டி யானையை வனப்பகுதிக்குள் கட்டிவிட்டு தாய் யானையை முகாமுக்கு அழைத்துச் செல்வோம். இப்போது முதன்முறையாக, அப்படியே மாற்றி செய்திருக்கிறோம்.

பொதுவாக குட்டி யானைப் பிரிந்ததும் 8-10 நாட்களுக்கு தாய் யானை தொந்தரவு செய்யும். வளர வளர குட்டி யானையின் சேட்டைகள் அதிகரிக்கும் என்பதால், அதைப் பிரித்து விடுவோம். தாமதம் ஏற்பட்டால் யானையை அடக்குவது கடினம். இந்த குட்டி யானைக்கு புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார். அந்தப் பகுதியினர் யானையை ’அப்பு’ (புனித் முதன்முதலாக ஹீரோவாக நடித்தப்படம். இது அவர் செல்லப் பெயர்) என்றழைக்கின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

சிறப்பு கேமரா மூலம் புகைப்படங்களை எடுத்து அசத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்!

Halley karthi

கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Gayathri Venkatesan

சசிகலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்

Ezhilarasan