மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மீனாட்சி கல்லூரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது. இந்நிலையில், வைகையாற்றில் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மீனாட்சி அரசு கல்லூரி சாலை மற்றும் கோரிப்பாளையத்திலிருந்து செல்லூர் செல்லும் சாலையிலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் யானைக்கல் சந்திப்பு, சிம்மக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து தரை வழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு மேம்பாலங்களில் மட்டுமே போக்குவரத்து இருப்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.








