கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (28.06.2025) நண்பகல் 12.00 மணியளவில் 117.390 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50000 கனஅடி முதல் 75000 கனஅடி வரை எந்நேரத்திலும் திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








