மழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்

மழைவெள்ள பாதிப்பு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்த மக்களை சந்திக்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம்…

மழைவெள்ள பாதிப்பு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்த மக்களை சந்திக்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் சக்திநாயக்கன் பாளையம் ஊராட்சி தோப்பு வளவு பகுதியில் சுமார் 55 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ராஜேஸ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பகுதி பொதுமக்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் குமரமங்கலம் ஏரிக்கு வந்து முறையாக வெளியேற வழி இல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

குமாரமங்கலம் ஏரிப்பகுதியில் இறைச்சி கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகள் சந்தை குப்பைகளை கொட்டுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் ஏரி தண்ணீர் மாசடைவதாகவும், எனவே இறைச்சி மற்றும் கோழி கழிவுகளை ஏரிக்குள் கொட்டாமல் தடுக்குமாறு பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஏரியில் தண்ணீர் திறக்கும் ஒரு மதகையும் அடைத்து விட்டனர் எனவும் அதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

குமாரமங்கலம் ஏரியின் உபரிநீர் வெளியேற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும், ஏரிக்குள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கவும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்கு செல்ல முடியாமல் சுமார் 180 க்கும் மேற்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வருகையை ஒட்டி தங்களை சந்திப்பார், தங்கள் குறைகளை கேட்பார் என நினைத்துக் கொண்டிருந்த பொது மக்களிடையே மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களை சந்திக்காமலே சென்று விட்டார்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் குறைகளை கேட்டு தங்களுக்கு தேவையானவற்றை செய்து தருவார் என நம்பி இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆய்வின்போது போது ஆர்.டி.ஓ இளவரசி தாசில்தார் அப்பன் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.