ஏரியில் படகில் பயணித்தவாறே உணவருந்த கூடிய வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
ஏரியின் அழகை ரசித்தவாறே உணவருந்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதவை உணவகம் செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் அமையவுள்ளது. அதுதொடர்பாக சுற்றுலாத்துறைச் செயலாளர் சந்தரமோகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் அமைய உள்ள மிதவை உணவகம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு படகு தயார் செய்யப்பட்டு அந்தப் படகில் உணவகம் ஏற்படுத்தப்படும். முட்டுக்காடு ஏரியில் பயணித்தவாறு அந்த உணவகத்தில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம்.
இரண்டு அடுக்கிலான உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. மூன்று மாதத்தில் படகு கட்டுமானம் முடிவடையும். ஏரியில் நீரின் ஆழம் குறைவாக இருந்தால் கூட அந்த படகு மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முட்டுக்காட்டில் மிதவை உணவகம் செயல்படுத்திய பின் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மற்ற இடங்களிலும் இதை போன்ற மிதவை உணவகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.







