சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை 2003ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல நகரங்களில் இது சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து அவ்வப்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனையும் மீறி கள்ளத்தனமாகவும், ஆன்லைன் மூலமாகவும் லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய பிரத்யேக களஆய்வில், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் நவீன முறையில், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை ஏ,பி.சி என மூன்று ரகமாக பிரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், இந்த லாட்டரி டிக்கெட்டுகளின் விலை, ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயித்து மர்மகும்பல் நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஒரு நம்பர் லாட்டரியால் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தவித்து வருகிறார். ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வில் லாட்டரி சீட்டுகள் நேரடியாக விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, கையும், களவுமாக பிடிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







