புதுச்சேரியில் முதலமைச்சர் பதவியேற்ற 50 நாட்களுக்கு பின்னர் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். எனினும், அமைச்சரவையில் யாருக்கு எவ்வளவு இடம் என்பதில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வந்ததால் புதிய அமைச்சர்கள் பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாஜகவிற்கு சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வழங்கினார்.
இந்தப் பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. அமைச்சர்களாக என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் சாய் சரவணன் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது,
இதனையடுத்து இன்று மதியம் 2.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் பாஜவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோரும் என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயணன், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவி பிரமாணமும் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.







