எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர்.
வங்ககடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் ஒருவார காலமாக கடலுக்கு செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், அதிகாலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீன்வர்களை தடுத்தி நிறுத்திய இலங்கை கடற்படையினர், அவர்களை தாக்கியும், படகுகளில் இருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனைகளையும் அள்ளி சென்றுள்ளனர்.
இதனிடையே, எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர்.
நடுக்கடலில் இந்திய, இலங்கை எல்லை தெரியாததால் தவறுதலாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து விட்டதாகவும், இலங்கை கடற்படை எச்சரித்ததுடன் இந்திய கடற்பரப்பிற்குள் வந்து விட்டதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.







