மீனவர்கள் முற்றுகை போராட்டம் – மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரியில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மீனவ சமுதாய மக்களின் கீழ் தூத்தூர் புனித யூதா…

கன்னியாகுமரியில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மீனவ சமுதாய மக்களின் கீழ் தூத்தூர் புனித யூதா கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் அக்கல்லூரியின் பின்பக்கத்தில் அமைந்துள்ளது. இதனை தனிநபர் ஒருவர் உரிமை கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, போலீசார் அனுமதியுடன் முள்வேலி அமைத்துள்ளார்.

இதனையடுத்து இரையுமன்துறை முதல் நீரோடி வரை உள்ள 8 மீனவ கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ அருட்தந்தையர்கள் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து முள்வேலிகளை பிடுங்கி எறிந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார், 8 அருட்தந்தையர்கள் மற்றும் ஊர்மக்கள் 50பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று பொய் வழக்கு பதிவு
செய்ததாக போலீசாரை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முள்வேலிகளை அகற்றுவதில் முன்னின்று வழிநடத்திய சின்னத்துறையைச் சேர்ந்த ராஜூ‌ என்பவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த தகவல் ஊர் முழுவதும் தீ போல் பரவியதை தொடர்ந்து 8 ஊரைச் சார்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் நித்திரவிளை காவல்நிலையம் முன் திரண்டு கைதான ராஜூ‌வை விடுவிக்கக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.