தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக பல ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.பல வன விலங்குகளின் உறைவிடமாகவும்,பல நதிகளின் பிறப்பிடமாகவும் உள்ளது.
இம்மலையில் பல அபூர்வ மூலிகை செடிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் பரந்து விரிந்துள்ளது.
எப்போதும் பசுமை மாறாமல் காணப்படும் மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இந்தாண்டு பொய்த்து போன இரண்டு பருவ மழைகளின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள மலைப்பரப்பானது காய்ந்துள்ளது.இதனால் செடிகள் காற்றில் அவ்வப்போது உரசுவதால் காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேக்கரை பகுதியில் உள்ள மலையடிவார பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக 100 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசமாகின.இந்நிலையில் இன்று கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு எரிந்து வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் வன சரகர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தீயை கட்டுபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் ஆங்காங்கே வன காவலர்கள் நின்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
-வேந்தன்