டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து!

துக்ளகாபாத் – ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

துக்ளகாபாத் – ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் இன்று மாலை தீப்பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, “தீ விபத்தில் இதுவரை பயணிகள் யாருக்கும் காயமோ, பாதிப்புகளோ இல்லை. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த பிசிஆர் அழைப்பு மாலை 4.41 மணிக்கு வந்தது. தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு சென்றதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை அணைக்க, ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என ரயில்வே டிசிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, “தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, மாலை 4 மணியளவில் தகவல் வந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். எட்டு தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் நடைபெற்றன” என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரயில்வேயின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.