கோவை குப்பை கிடங்கு தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட விவகாரம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில் அதற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது இந்த குப்பை கிடங்கில் 253 ஏக்கர் பரப்பளவிற்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கோவை நகரில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் இங்கே தான் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடைகாலத்தில் இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது இந்த குப்பை கிடங்கை சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் இங்கு ஆயிர கணக்கில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இன்று நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்டது குறித்து மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. அதில், வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ பற்றிய சமயத்தில் தீ தடுப்பு பணியில் சுழற்சி முறையில் தீயனைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர் என சுமார் 500 லிருந்து 600 பணியாளர்கள் ஈடுபட்டார்கள்.சுழற்சி முயற்சியில் பணியாற்றியவர்களுக்கு மூன்று வேலை தரமான உணவு மற்றும் வெயில் காலம் என்பதால் 24 மணி நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட், டீ ஆகியவை வழங்கபட்டதாகவும் இதன் செலவாக 27.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.







