திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி; புதுமண தம்பதிகளுக்கு குவியும் பாராட்டு

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையன்- ராஜேஸ்வரி…

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த புதுமணத் தம்பதிகளின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்த புத்தூர் வடக்கு தெருவைச்
சேர்ந்தவர் முத்தையன்- ராஜேஸ்வரி தம்பதியினர். முத்தையன் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவரது மகன் மணிகண்டன் என்பவருக்கும்,அதே ஊரைச் சேர்ந்த
பிரியங்கா என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு கோவிந்த புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற ஸ்தலமான கங்காஜடேஸ்வரர் கோவிலில் இன்று ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய சேமிப்பு பணத்தைத் தான் படித்த அரசு பள்ளிக்கு கல்வி வளர்ச்சி பணிகளுக்காக நிதி அளிப்பதற்கு மணிகண்டன் முன்வந்தார்.

இதனை தனது மனைவி பிரியங்காவிடம் தெரிவித்து, உடனடியாக திருமணம் முடிந்த
கையோடு அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதுமணத்
தம்பதிகள் நேரில் சென்றனர். அப்போது அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூபாய் 10 ஆயிரத்திற்கான தொகையை மணிகண்டன் பிரியங்கா தம்பதியினர் அளித்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பிறகு மண்டபத்திற்குச் சென்றனர். புதுமணத் தம்பதிகளின் இந்த செயலால் அவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.