சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகமும், மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
இதனையடுத்து இன்று மாலை மதுரைக்கு புறப்படுவதற்காக கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். கள்ளர் திருக்கோலத்தில் காட்சி தந்த கள்ளழகர், சர்வ அலங்காரம், படை பரிவாரங்களுடன் அழகர்கோயில் அலங்கார மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
பின்னர் மாலை 7 மணியளவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். அவரை வழிநெடுக மக்கள் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர். கள்ளழகர் புறப்பட்டுச் செல்லும் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாளை மூன்று மாவடியில் எதிர்சேவையும், மே 5 ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை நியூஸ்7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் காண :







