ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி, பிப்.7-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவகுமாரின் அறையில், நடக்க உள்ளது. மனுதாக்கல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 8-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், மனுக்களை திரும்ப பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகினறன. வேட்புமனுக்கள், முன்மொழிவு படிவம் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தில் இருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு செல்லும் வழிகள் குறித்த சுவரொட்டிகள் சுவற்றில் ஒட்டப்பட்டன. 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகளும் வரையப்பட்டன.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இவரைத்தொடர்ந்து தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் நாளை மறுநாளும் (புதன்கிழமை), அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் 3-ந் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
நாளை வேட்பு மனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில் இன்னும் பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா