மதுபோதையில் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சினையில், தந்தையே 15 மாத குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாத்தகனுப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் மது. கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 15 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. மதுவிற்கு மது என்று பெயர் வைத்ததாலே என்னவோ மதுபானம் மீது இவருக்கு அவ்வளவு பிரியம். மதுபழக்கத்திற்கு அடிமையான மது, தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்று மனைவியோடு சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுவிற்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தையும் மது அருந்தியே செலவு செய்ததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டிருக்கிறார் மதுவின் மனைவி. இதனால் மது பழக்கத்தை கைவிடக் கூறி பலறை கண்டித்தும் மதுப்பழக்கத்தை கைவிடாமல் இருந்திருக்கிறார் கணவர் மது.
இந்த சூழலில் சம்பவத்தன்று வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற மது, அவரது மனைவியோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே மதுபோதையின் உச்சத்தில் இருந்த மது, தனது மனைவி மீதுள்ள கோபத்தை அவரது 15 மாத குழந்தை மீது காட்டிருக்கிறார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை பலமாக தாக்கியிருக்கிறார் மது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மதுவின் மனைவி கதறி அழுதிருக்கிறார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை இறந்துகிடந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குழந்தை உயிரிழந்ததும் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோன மது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாயுடு பேட்டை போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை மதுவை தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபோதையில் இருந்த தந்தை தனது 15 மாத மகளை அடித்தே கொலை செய்த சம்பவம் நெல்லூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.