மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறிய கணவனின் பிறப்புறுப்பை வெட்டி, 2 வது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சிகார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வகீல் அகமது (57). மவுலவியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி ஹஜ்ரா (Hazra). மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில நாட்களாக வகீல் அகமது மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வந்தார். இதை ஹஜ்ரா எதிர்த்தார். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. வகீல் அகமதுவின் முதல் மனைவி, வீட்டில் இல்லை. இரவில் வகீல் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை கொலை செய்ய முடிவு செய்தார் ஹஜ்ரா.
அதன்படி வீட்டில் சமையலறையில் இருந்த கத்தியால், தூங்கிக்கொண்டிருந்த வகீல் அகமதுவின் பிறப்புறுப்பை வெட்டினார். இதனால் கதறித் துடித்தார் அவர். ரத்தம் அதிகமாக வெளியானதால், அவர் அங்கேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போரோகலன் போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹஜ்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் அவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.