சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், வேதனையில் இருந்த மாணவியின் தந்தை நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார்.
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். நேற்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டார் என கூறப்படுகிறது. இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைபாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்டதையறிந்து வேதனையடைந்த மாணவியின் தந்தை மாணிக்கத்திற்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனே, உறவினர்கள் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதோடு, அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-இரா.நம்பிராஜன்





