தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 19ம் தேதி பேரவையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், அணைக்கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடியதும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் விதி எண் 110 – கீழ் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். சட்டபேரவையில் அவர் பேசியதாவது, “ 37 நிமிடங்கள் நீடித்த ஆளுநர் உரையில் பல்வேறு தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்தார்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “ ஆளுநர் வேறு மாநிலத்தைச் சார்ந்தவர். அரசு எழுதிக் கொடுத்தை முறையே படித்திருக்கிறார். அவர் தமிழ் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரித்ததால் ஆளுநரை விமர்சிக்க கூடாது” என்று அவர் பதிலளித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த, “ 2006-ல் விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மீண்டும் என்னை விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. விருதாச்சலம் தொகுதியினை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் நிறைந்த தொகுதியில் குடிநீர் பிரச்சனை இருப்பதால் அங்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.மேலும், “விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு இந்த அரசு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.




