“விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை” – காங். தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் பேட்டி!

விவசாயிகளுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கும் போராட்டத்தில்…

“Farmers' demands are legally justified” - Congress leader Amarinder Singh Raja Waring interview!

விவசாயிகளுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது இன்று (டிச. 14) ஹரியாணா காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் – ஹரியாணா மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனைக் கண்டித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான அமரீந்தர் சிங் ராஜா வாரிங் செய்தியாளர்களுடன் பேசியதாவது,

“விவசாயிகள் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்களை நடத்துவதுபோல அமைந்துவிட்டது. இப்படி நடந்திருக்கக் கூடாது. நாட்டுக்கு அன்னமிடுபவர்கள் விவசாயப் பெருமக்கள். அவர்கள்தான் மக்களுக்கு உணவளிக்கிறார்கள். அப்படியிருக்கையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதற்காக டெல்லி செல்ல முற்படுகின்றனர். ஆனால், அவர்கள் டெல்லிக்குள் வர அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறான அணுகுமுறையை அரசு கடைப்பிடிக்கக்கூடாது. அவர்கள் டெல்லிக்கு வர அனுமதியளிக்கப்பட வேண்டும்.

அரசு தரப்பிலிருந்து எவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. உண்ணாவிரதமிருந்து போராடி வரும் தல்லேவால் சாஹேப்பின் உடல்நிலை நலிவடைந்து வருகிறது. ஆனால் ஒருவர் கூட அவரிடம் பேசி உண்ணாவிரத்ததை முடிவுக்கு கொண்டுவர அவசரம் காட்டவில்லை. நாடாளுமன்றத்தில் இன்று அரசமைப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அவர்கள் மனதில் உதிக்கும் கருத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது. இது குறித்தே இன்று விவாதித்தோம்.

விவசாயிகளுக்கு செவிமடுக்க வேண்டும். அவர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானவை. ஒருவேளை உங்களால் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூட நேரம் இல்லையா உங்களுக்கு? இந்த அணுகுமுறைய நாங்கள் எதிர்க்கிறோம். சாஹேபை சந்தித்துப் பேச உள்ளேன். அவர்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.