“விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கண்டண் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “மேகதாது விவகாரத்தில் தவெக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, தவெக ஆட்சி அமைய காரணமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிகவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட சொல்கின்றன. எதுவுமே காதில் விழவில்லை. கூட்டணி கட்சி தலைவர்களையே மதிக்காதவர் முதலமைச்சர் விஜய். தவெக அரசைப் பொறுத்தவரை ரீல்ஸ் விடுவது, ரீல் விடுவது என காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளைப் பற்றி இந்த அரசுக்கு கவலையில்லை.

விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார். நாட்டில் எவ்வளவு பிரச்னை இருக்கிறது, நவீன அறை வேணுமாம். அவருக்கு அறைதான் முக்கியம், மக்கள் முக்கியமில்லை, நடிகர் அப்படித்தான் இருப்பார், தலைவிதி என்ன செய்வது.

அரசு விழிப்போடு செயல்பட்டு, சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடகாவிடன் பெற்றுத்தர வேண்டும். காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்த தர வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.