துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

விவசாயிகள் மகா பஞ்சாயத்து அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

துவரம் பருப்பை வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் தொடர்ந்த மகா பஞ்சாயத்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். அப்போது,

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருப்பு குவிண்டாலுக்கு 8500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இறக்குமதி பருப்பு 3500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த வகை பருப்பு வெளிநாடுகளில் கால்நடைகளுக்கு மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது. இது மனிதர்கள் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். இந்த வகை பருப்பு இறக்குமதி காரணமாக உரிய விலை கிடைக்காமல் நமது விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து பல பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.