ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளம் பயிருக்கு இடையே கஞ்சா செடி பயிரிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் அருகே உள்ள மொசல்மடுவு கிராமத்தில் வசித்து வருபவர் குப்புச்சாமி மகன் மணி. இவர் மொசல்மடுவு பகுதியில் உள்ள தனது 1/2 ஏக்கர் காட்டிற்கு அருகில் உள்ள புறம்போக்கு பூமியில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்துள்ளார். ஆனால், மக்காச்சோளம் பயிருக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட போதை பயிரான கஞ்சா செடியை விதைத்துள்ளார்.
தொடக்கத்தில் இது சாதாரண செடி போல தெரிந்துள்ளது. ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர்தான் இது கஞ்சா செடி என தெரிந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின்பேரில் ஆய்வு செய்த கடம்பூர் போலீசார், மக்காச்சோளம் பயிருக்கு இடையே பயிரிட்டிருந்த சுமார் 3 1/2 அடி உயரம் உள்ள 29 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து மணியை கைது செய்தனர்.
மக்காச்சோளம் பயிருக்கு இடையே கஞ்சா செடியை பயிரிட்ட விவசாயி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









