லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று விவசாய அமைப்புகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
இதற்கிடையில், லகிம்பூர் கேரி பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமமான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.கவினரின் வாகன அணி வகுப்பில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










